செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் மின் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையத்தில் சிஐடியு மின் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனல் மின் நிலைய ஊழியர் சிஐடியு சங்க தலைவர் அப்பாதுரை தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அனல்மின் நிலைய நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து அப்பாதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தூத்துக்குடியில் இயங்கிவரும் அனல் மின் நிலைய நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அனல் மின் நிலையத்தில் இன்று வரை நிரந்தர பணியாளர்கள் யாரும் பணிக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதனை எதிர்த்து சிஐடியு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டுமெனவும், நிரந்தர பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அணுமின் நிலைய நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. மேலும் தொழிலாளர்களுக்கு அனல் நிலையத்தில் கழிவறை, குடிநீர், உணவகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். குறிப்பாக பெண் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் ரூ.3000 பிடித்தம் செய்யப்பட்டு மீதி வழங்கப்படுகிறது. பிடித்தம் செய்யப்படும் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button