கரூர் மண்மங்கலம் அருகேயுள்ள புது காளியம்மன் ஆலயத்தில் திமுகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தீக்குளிப்பதாக கடிதம் எழுதி வைத்து திமுக விசுவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த உலகநாதன் (60) ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை பரிசோதகரான இவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மண்மங்கலம் புது காளியம்மன் ஆலயத்தில் தீக்குளித்து உயிரை காணிக்கையாக செலுத்துவதாக பிராத்தனை செய்துள்ளார்.
அதேபோல திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக காத்திருந்த உலகநாதன் இன்று அமாவாசை தினம் என்பதால் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய அவர், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோயிலுக்கு காலை 11 மணி அளவில் பெட்ரோல் கேனுடன் நுழைந்தார்.
திடீரென கோயிலை வலம் அந்த உலகநாதன் தன் கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
கோயில் ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்ட பொழுது முழுவதுமாக எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாங்கல் காவல்துறையினர் உலகநாதன் கைப்பட எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்மங்கலம் புது காளியம்மன் கோயில் திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜியின் குலதெய்வம் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக வெற்றி பெற்றதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா(32) நாக்கை அறுத்து பரமக்குடி முத்தாலம்மன் கோயில் உண்டியலில் நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், தற்பொழுது கரூரில் திமுக விசுவாசி ஒருவர் தீக்குளித்து உயிரிழந்திருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தீக்குளித்து உயிரிழந்த உலகநாதன் எழுதிய கடிதத்தில்,
“மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கு நான் தேர்தல் அறிவித்த உடன் ஆட்சி மாற்றம் வரவேண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும்.
கரூர் தொகுதியில் மாவட்ட செயலாளர் அரசியல் சாணக்கியர் அதிர்ஷ்டக்காரர் வி.செந்தில் பாலாஜி வெற்றி வாகை சூடி அமைச்சராக வேண்டும் என மண்மங்கலம் காளியம்மன் கோயிலில் வேண்டுதல் வைத்திருந்தேன். அதாவது திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கரூரின் அதிர்ஷ்ட வேட்பாளர் வெற்றி பெற்று அன்புத்தம்பி அமைச்சராக வேண்டும் என வேண்டிய நிலையில் தங்கத்தமிழன் தளபதி மு.க.ஸ்டாலினை மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகள் எல்லாம் நன்றி கெட்ட எடப்பாடி பேசியதையும் அனைத்து டிவி சேனல்களிலும் மிக மிக தரம் தாழ்ந்த விளம்பத்தை திமுகவை பற்றி அதிமுக ஒளிபரப்பியும் மக்கள் மனதை மாற்ற முடியாத நிலையில், எங்கள் தளபதி அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை பார்த்து எங்கள் அன்பு அண்ணியார் துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் விட்டதை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்நிலையில் பதவியேற்றபோது கொரோனா தொற்று 36 ஆயிரத்துக்கும் மேல் இருந்தது. குறையட்டும் எல்லோரும் நலம் அடைந்த பிறகு என் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என காலதாமதம் செய்துவிட்டேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டனின் உயிர்மூச்சு உள்ளவரை திமுக ஆட்சி அமைந்து கொண்டேதான் இருக்கும். நான் காளியின் அருள் பெற்றவன் நான் சொல்வது நடந்துகொண்டே இருக்கும்.
நான் செய்யும் பிரார்த்தனை நிறைவேற்றுதல் என் சுயநினைவுடன் இறப்பை தேடுகிறேன். வேறு எதுவுமில்லை.
மேலும், எனது இரண்டாவது மகன் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்தில் கடந்த 5 வருடமாக கிராம நிர்வாக அலுவலராக நல்ல முறையில் பணியாற்றி வருகிறான். அவன் கரூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்து அமைச்சர் அவர்கள் நேரடி பார்வையில் வைத்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் தான் எனது இறுதி ஆசை.
என் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். போக்குவரத்து கழக நண்பர்கள் மற்றும் அதிகாரிகள் என் உறவினர்கள் அரசியல் கட்சியை சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீஸ்வரன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் குடும்பத்தினர் – கரூர் மண்ணின் மைந்தர் விடிவெள்ளி மாண்புமிகு வி.செந்தில் பாலாஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றியுடன்.
இப்படிக்கு தங்கள் அடிமட்ட தொண்டன் சு.உலகநாதன் என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.
செய்திகள் : கண்ணன், கரூர்