கோவை: கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் 280 நகர பேருந்துகளில், தினமும் இரண்டு லட்சம் மகளிர் கட்டணமின்றி பயணிப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் இயங்கும் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில், மகளிர் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, மகளிர் பெரும்பாலானோர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பால், ஏப்ரல் 22 முதல் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது, கோவை பகுதியில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், கோவை மாவட்டத்தில் கடந்த ஐந்தாம் தேதி முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், கோவை கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வரும் நகர்ப்புற, சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணித்து பயனடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில், கட்டணமின்றி பயணம் செய்யும் மகளிரின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள வசதியாக கடந்த திங்கள்கிழமை முதல் மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,012 அரசு பேருந்துகள் உள்ளன. இதில் தற்போது ஒரு நாளைக்கு 740 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதில் 310 பேருந்துகள் கோவையில் இருந்து சேலம், திருப்பூர், கரூர், மதுரை, சத்தி, ஈரோடு உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 430 நகர பேருந்துகளில் 280 சாதாரண பேருந்துகள், 150 சிவப்பு நிற சொகுசு பேருந்துகளாகும். சொகுசு பேருந்தில் பயணிக்க மகளிர் கட்டணம் செலுத்த வேண்டும். சாதாரண கட்டண பேருந்துகளில் அவர்கள் இலவசமாக பயணிக்கலாம். கோவையில், கட்டணமில்லா பேருந்துகளை மகளிர் அடையாளம் காணும் வகையில் அந்த பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
தினமும் கோவையில் இயக்கப்படும் ஒரு சாதாரண பேருந்தில் 700 முதல் 800 மகளிர், கட்டணமின்றி பயணிக்கின்றனர். ஒரு நாளைக்கு, 280 பேருந்துகளில் இரண்டு லட்சம் மகளிர் கட்டணமின்றி பயணிக்கின்றனர்’’ என்றார்.