கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் மீண்டும் துவங்கப்பட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்தது. தினமும் 4 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
முக்கிய தொழிற்சாலைகள் தவிர்த்து பிற தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரக பகுதிகளிலும் தொற்று அதிகரித்ததால் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊரக வேலை உறுதி திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 14 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொரோனா தொற்று காரணமாக ஆரம்பத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்டது. கிராமப்புற மக்களுக்கு வேலை அளிக்கும் முக்கிய திட்டமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளது.
எனவே, கிராமப்புற மக்களின் நலன் கருதி வேலைவாய்ப்பு திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு சராசரியாக ரூ.252 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பளம் அவர்கள் செய்யும் பணியை பொறுத்து வேறுபடும். இவ்வாறு அவர் கூறினார்.