முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் வந்த பணத்தை எடுக்காமல் விட்ட ரூபாய் 10,000/-த்தை, அங்கு அடுத்து வந்த மற்றொரு நபர் எடுத்துச்சென்றதை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்து மீட்ட பணத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.*
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சம்சுமரைக்காயர் மகன் சம்சுக்கனி (65) என்பவர் கடந்த 07.05.2021 அன்று ஸ்பிக் நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூபாய் 10,000/-தை எடுத்துள்ளார். ஆனால் அந்த பணப் பரிவர்த்தனை முடிவடைவதற்குள் சம்சுக்கனி பணம் வரவில்லை என்று அதே அறையிலிருந்த மற்றொரு இயந்திரத்தில் ரூபாய் 10,000/-ம் எடுத்துச் சென்று விட்டார்.*
அவர் வீட்டிற்குச் சென்ற பிறகு செல்போனிற்கு இரு முறை பணம் 10,000/- எடுத்ததாக குறுஞ்செய்தி வந்திருக்கிறது, இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்து பலனில்லாததால் கடந்த 10.06.2021 அன்று தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்களுக்கு உத்தரவிட்டார்.*
அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் அந்த ஏ.டி.எம் மையம் மற்றும் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும், சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்.ல் பணம் யார், யார் எடுத்துள்ளனர் என்ற விபரங்களை போலீசார் ஆராய்ந்த விசாரணை செய்ததில், சம்சுக்கனி பணம் வரவில்லை என்று ஏ.டி.எம் இயந்திரத்திலேயே விட்டுச் சென்ற ரூபாய் 10,000/-த்தை, அவருக்கு அடுத்து வந்த நபர் பணத்தை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.*
இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் அவரிடமிருந்து அந்தப் பணத்தை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று அதன் உரிமையாளரான சம்சுகனியிடம் ஒப்படைத்தார்.*
பொதுமக்கள் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பணப்பரிவர்த்தனை முழுமையடைந்துவிட்டதா என சரிபார்த்த பின்னரே அங்கிருந்து செல்ல வேண்டும். இதுபோன்று பணம் எடுக்கச் செல்லும்போது யாராவது இயந்திரத்தில் வந்திருந்த பணத்தை எடுக்காமல் விட்டுச் சென்றிருந்தால், அந்த பணத்தை எடுத்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அடுத்தவர் பணத்தை எடுத்துச் சென்றால் அதை கண்டுபிடிப்பதற்கு சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் பல வழிமுறைகள் உள்ளது, யாராலும் தப்ப முடியாது. ஏ.டி.எம் இயந்திரத்தில் பண பரிவர்த்தனை செய்யும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.*