கொரோனா 3-வது அலை தினமும் 1 லட்சம் பேரை தாக்கும் – மருத்துவ நிபுணர் தகவல்
கோப்புபடம்
தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் 3-வது அலை மிகவும் எழுச்சியாக காணப்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 98 ஆயிரம் வரை பதிவானது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கியது.
கொரோனா 2-வது அலை மே மாதம் உச்சத்தை தொட்டது. அப்போது அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 4 லட்சத்து 14 ஆயிரம் ஆக இருந்தது. தற்போது 2-வது அலை குறைய தொடங்கி தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா 3-வது அலை ஆகஸ்டு மாதம் இறுதியில் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா 3-வது அலை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மற்றும் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன.
இந்த ஆய்வில் கொரோனா 3-வது அலை உருவாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். தொற்று நோயியல் பிரிவு தலைவர் டாக்டர் சமீரன் பாண்டா கூறியதாவது:-
இந்தியாவில் அடுத்த மாதம் இறுதியில் கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் உள்ளது. கொரோனா 3-வது அலையின்போது தினமும் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே 3-வது அலையின் போதும் ஏற்படும்.
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து 3-வது அலை ஏற்பட்டால் நிலைமை மோசமாக இருக்கும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் 3-வது அலை மிகவும் எழுச்சியாக காணப்படும். ஆனாலும் 2-வது அலை போல கடுமையானதாக இருக்காது.
கூட்டம் கூடுவதை தவிர்த்தல், முகக் கவசம் அணிதல் போன்றவை மூலமாகவும் 3-வது அலையை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் சுற்றுலா செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
3-வது அலையை எதிர் கொள்ள தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட் தடுப்பூசி திட்டம் இருக்க வேண்டும்.
தடுப்பூசிக்கு பின்பு நோய் தொற்று பரவுவது பற்றிய ஆய்வில் 9.8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கண்ட றியப்பட்டுள்ளது. இறப்பு 0.4 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்