செய்திகள்தொழில்நுட்பம்
Trending

பத்திரிக்கையாளர்கள் மற்றும் அமைச்சர்களின் செல்போன் ஒட்டு கேட்பு

இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் செல்போன் இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் உலகம் முழுதும் 21 நாடுகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கிய NSO எனும் இஸ்ரேல் நிறுவனத்தால் உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் கசிந்துள்ளது. இந்த பட்டியல் குறித்து பிரான்ஸைச் சேர்ந்த பிரபல லாப நோக்கமற்ற ஊடக நிறுவனமான `Forbidden Stories` புலனாய்வு செய்து செய்தியை வெளியிட்டது.

இந்த பட்டியல் எங்கிருந்து வெளியானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என NSO தகவல் தெரிவித்துள்ளது.

பெகாசஸ் ஸ்பைவேர் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கண்காணித்து, அதில் இருக்கும் மேசேஜ்கள், மின்னஞ்சல்கள், தொலைப்பேசி அழைப்புகள் ஆகியவற்றை உளவு பார்த்து ஒட்டு கேட்கிறது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான மொபைலின் மைக்ரோபோன்களையும் இதனால் ரகசியமாக இயக்க முடியும்.

இது நல்ல மனித உரிமை பதிவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவம், சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என NSO கூறியுள்ளது.

இந்தியாவில் 40 பத்திரிக்கையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 2 அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன்கள், Hindustan Times, India Today, Network 18, The Hindu, Indian Express போன்ற செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் முன்னணி பத்திரிக்கையாளர்கள் செல்போன்கள் ஆகியவை கண்காணிக்கப்பட்டதாக The Wire நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர ABP, CNN, The Newyork Times, Al Jaseera உள்ளிட்ட பல சர்வதேச செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் செய்தியாளர்களின் செல்போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் இந்த கண்காணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் உலகம் முழுவதும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என Forbidden Stories நிறுவனர் Lauren Richard தெரிவித்தாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கண்காணிப்புக்கு உள்ளானவர்கள் குறித்தும் அதன் கூடுதல் விபரங்கள் குறித்தும் தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button