செய்திகள்

சட்டவிரோதமாக மணல் கடத்துபவருக்கு ஆப்பு : உயர்நீதி மன்றம் உத்தரவு

சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க குவாரிகளில் சிசிடிவி கேமரா: உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க மணல் குவாரிகள், மணல் சேகரிப்பு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் ஆராய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை அம்பை அருகே பொட்டலைச் சேர்ந்த வி.கிறிஸ்டி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

”பொட்டல் கிராமத்தில் எம் சாண்ட் என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்பட்டு கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் ஆற்று மணல் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீஸார் உதவியுடன் இந்த சட்டவிரோதச் செயலில் பூமி எம் சாண்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் 14.3.2020-ல் புகார் அளித்தோம். இருப்பினும் பூமி எம் சாண்ட் நிறுவனம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். கிராம மக்கள் அளித்த புகார் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி போலீஸார் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர், பால்ராஜ், சங்கரநாராயணன் லெட்சுமணன் ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களுக்கும் மணல் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பூமி எம் சாண்ட் நிறுவன உரிமையாளரைத் தப்பிக்க வைக்க இவர்களைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்”.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கர், ”வண்டால ஓடை அணை அருகே கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு எம் சாண்ட் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஓடை அணைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி வருகிறார். தினமும் சுமார் 300 லாரி வரை மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. அணை பலம் இழந்து வருகிறது. எனவே சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதைத் தடுக்கவும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்தார்.

இவ்விரு மனுக்களையும் விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

”மணல் சேகரிப்பு மையம் நடத்த மனுவேல் ஜார்ஜுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துள்ளார். இது தொடர்பாக மனுவேல் உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 243 அரசு ஹாலோ கிராம், அதிகாரிகள் கையெழுத்து இல்லாத போக்குவரத்து அனுமதிச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றவாளிகளிடம் இருந்து சட்டவிரோத மணல் கடத்தலுக்காக அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய பதிவேடு கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து விசாரிக்கவில்லை. கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் சரியாக விசாரணை நடத்தியுள்ளார். இருப்பினும் இந்த வழக்கில் வருவாய், வேளாண், கனிமவளத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளது. இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது.

குவாரிகளுக்கு அனுமதி / உரிமம் வழங்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவாரி பகுதிகளுக்கு அடிக்கடி அல்லது திடீர் ஆய்வு மேற்கொண்டு அனுமதி/ உரிமம் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து குவாரிகள் மற்றும் மணல் சேகரிப்பு நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும். மாநில அளவிலும், மாவட்டம் மற்றும் தாலுக்கா அளவிலும் குவாரி கண்காணிப்புப் பிரிவை அமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சட்டவிரோதக் குறைபாடுகளைக் குறைக்க முடியும்”.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.✳️✳️

*SPIDER 🕷️ MAN*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button