திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையை சேர்ந்தவர் சின்னையா. இவருக்கு மரியபாக்கியம் என்ற மனைவியும், மரிய யாகோப், அமல்ராஜ், லூர்துராஜ் என 3 மகன்களும் உள்ளனர். சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் லூர்துராஜ் சொத்து தொடர்பாக தனது தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட மோதலில் தனது தந்தை சின்னையாவை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த அவரது தாய் மற்றும் சகோதரர்களையும் அரிவாளால் தாக்கியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர் இதை கண்ட லூர்துராஜ் தப்பி ஓடி விட்டார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லூர்துராஜை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அக்கபக்கத்தினர் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.