தமிழக சிறைகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறைவாசிகள் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக சிறைவாசிகள் அவர்களது உறவினர்கள் / நண்பர்களை தொடர்பு கொள்ள வழக்கமான தொலைபேசி அழைப்புகளுடன் , ஆண்ட்ராய்டு கைபேசி வாயிலாக வீடியோ அழைப்புகள் செய்யவும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக 58 ஆண்ட்ராய்டு கைபேசிகள் சிறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சிறைகளை இணையம் மூலம் இணைக்கும் eprisons என்ற வசதியை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. E- mulakat என்னும் ஆன்லைன் நேர்காணல் முன்பதிவு மேற்கண்ட e-prisons ன் ஓர் அங்கமாக உள்ளது. நேர்காணல் செய்ய விரும்பும் சிறைவாசிகளின் உறவினர்கள் / நண்பர்கள் / வழக்கறிஞர்கள் தொலைபேசி வாயிலாகவோ அல்லது பின்வரும் E-Mulakat இணையத்தின் மூலமாகவோ
முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், தங்களது பெயர், பாலினம், வயது, தொலைபேசி எண் போன்ற விவரங்களுடன் , நேர்காணல் செய்யப்பட வேண்டிய சிறைவாசியின் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இம்முறையில், சிறைவாசியை நேரிலோ அல்லது காணொளி காட்சி மூலமாகவோ நேர்காணல் செய்யலாம். (தற்காலிகமாக நேரடி நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது). நேர்காணல் உறுதி செய்யப்பட்ட விவரம், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மூலம் பார்வையாளர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும்.
பார்வையாளர்கள் E-Mulakat மூலம் முன்பதிவு செய்யும் முறை, சிறவாசிகளை சிரமமின்றி சந்திப்பதற்கு பயனுள்ளதாக இருப்பதாக காவல்துறை இயக்குனர் / சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு.சுனில் குமார் சிங் , இ.கா.ப தெரிவித்துள்ளார். மேலும் இம்முறையால் சிறையின் நுழைவாயில் தேவையற்ற கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். காணொளி மூலம் சிறைவாசிகளை நேர்காணல் செய்யும் இம்முறை 9 மத்திய சிறைகள், 5பெண்கள் தனிச் சிறைகள் , 12 மாவட்டச் சிறைகள் , 84 கிளைச் சிறைகள் / தனிக்கிளைசிறைகள் உள்ளிட்ட 110 இடங்களில் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக, 06.07.2021 முதல் 21.07.2021 வரையிலான காலத்தில், 770 பார்வையாளர்கள் சிறைவாசிகளை E-Mulakat மூலம் நேர்காணல் செய்துள்ளனர்