சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1,00,000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதி மக்களுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு முதளுதவி சிகிச்சை அளிக்க பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லை எனவும்,நேற்று இரவு பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த வேளாங்கண்ணி(42) என்ற பெண்மணி நேற்று மதியம் சிகிச்சை பெற்று மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் நேற்று இரவு 11 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது கணவர் மற்றும் குழந்தைகள் சிகிச்சை அளிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செம்மஞ்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் பொழுது பெண்மணி உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் இன்று இறந்த வேளாங்கண்ணியின் உறவினர்கள் பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில் தொடர்ந்து இரவு நேரங்களில் சிகிச்சை பெறுவதற்கு வரும் பொழுது மருத்துவர்கள் இல்லாததால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும்,இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குற்றச் சாட்டுகின்றனர்.
விரைவில் தமிழக அரசு பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
செய்திகள் : ரமேஷ், சோழிங்கநல்லூர்