மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். அதனை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.
இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்
மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்! இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விவசாயிகள் மீது கார் ஏற்றி நசுக்கியவர்களை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அமைதியாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றி நசுக்கிய வீடியோ காட்சியையும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லட்சுமிபூரில் மாநில துணை முதலமைச்சர் மற்றும் மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விழா ஒன்றிற்கு பங்கேற்க சென்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அமைச்சர் காருடன் உடன் வந்த கார் ஒன்று போராட்டக்காரர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு விவசாயிகள் உட்பட 8 பேர் இதில் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைய முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தான் கடந்த 28 மணி நேரமாக எவ்வித உத்தரவு அல்லது வழக்குப்பதிவு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை ஏன் உங்கள் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது? என்றும் பிரியங்கா கேள்வியெழுப்பியுள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #protectfarmers #tamilnadu #mkstalin #தமிழ்நாடு #செய்திகள் #சிறந்தசெய்திகள் #முகஸ்டாலின் #வேளாண்சட்டம்