புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள தென்காசி மாவட்டத்தின் கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் பெரியகோவில் என்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள மக்களால் அழைக்கப்படுகிறது.
இத்தகைய திருக்கோவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும், பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலின் மூல அதிபதியாக சிவன் விளங்குகின்றார், அதுமட்டுமல்லாமல் இந்தக் கோவிலில் உலகம்மன் மற்றும் முருகருக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன.
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் பல வகையான கடவுள்களின் சிலைகளும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த திருக்கோவிலில் சிற்பக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் பலவிதமான சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோவிலின் கோபுரத்தை ஆரம்ப காலத்தில் கட்டும்பொழுது சரியாக நிற்க வில்லை என்றும் கோபுர காளியின் சிலையை பிரதிஷ்டை செய்த பிறகே இந்த கோபுரம் எந்த தடையும் இன்றி மேல் எழுப்பப்பட்டது என்றும் முன்னோர்களால் கூறப்படுகிறது.
எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கோபுர காளியை வணங்கிய பிறகே உள்ளே செல்கின்றனர். காசி விஸ்வநாதர் கோவிலின் நுழைவு வாசலை கடந்து செல்லும் பொழுது கோபுரத்தின் இரண்டு பக்கங்களிலிருந்தும் வருகின்ற காற்று பக்தர்களை உற்சாகப்படுத்துகிறது.
வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இந்தக் கோவிலில் மட்டுமே இவ்வாறு சில்லென்ற காற்று வீசுகிறது. இந்த கோபுரத்தின் உயரம் சுமார் 180 அடி ஆகும் இதனுடைய நீளம் கிழக்கு மேற்காக 554 அடியும் இதனுடைய அகலம் தெற்கு வடக்காக 318 அடியும் உள்ளது. பராக்கிரம பாண்டிய மன்னரால் கிபி 1445 ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் திருக்கோவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது, சுவாமி மற்றும் அம்மன் உருவ சிலைகள் கிபி 1446 பிரதிஷ்டை செய்யப்பட்டன.
முன்னதாக ஒரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்தவர் பராக்கிரம பாண்டியர் ஆவார். அவருடைய கனவில் சிவபெருமான் தோன்றியதாகவும் பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளை பின் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தை காணலாம் என்றும் சிவபெருமான் கூறியதாகவும் அந்த இடத்தில் தனக்கு ஒரு கோவிலை கட்டு மாறும் கூறினார் என்று சொல்லப்படுகிறது.
அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்பே இறந்து விடுவதனால் அவர்களின் அருள் பெற வேண்டுமானால் தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராக்கிரம பாண்டிய மன்னனும் தன் முன்னோர்கள் வழிபட்ட லிங்கத்துக்காகத்தான் கட்டப்பட்டது இந்த தென்காசி கோபுரம். இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது.
கட்டுரை : மகாராணி, தென்காசி