கோடை வெயிலின் தாக்கம் காரணமாக நீலகிரிக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் சித்தாப்புதூர் பகுதியில் இருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் கோத்தகிரி பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியபடி அருகில் உள்ள பகுதிகளைக் கண்டு ரசித்து வந்துள்ளனர்.அப்போது நண்பர் வீட்டின் அருகில் உள்ள சிறிய நீரோடையில் நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது இடி மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. இதில் அருகில் இருந்த குளவி கூடு கலைந்து குளவிகள் திடீரென அங்கிருந்தவர்களைத் கொட்டத் தொடங்கியிருக்கிறது. இதில் குளிக்கச் சென்ற 9 பேரையும் குளவிகள் கொட்டியுள்ளன. இதைக் கண்டுப் பதறிய உள்ளூர் மக்கள், 9 பேரையும் கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர், ” குளவிகள் கொட்டியதில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான 52 வயதான கார்த்திகேயன், 54 வயதான ராஜசேகரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 56 வயதான ரவி என்பவரை உயர் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சுற்றுலா வரக்கூடிய மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுற்றுலாத்தலங்களைத் தவிர மற்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் ” என்றனர்.