கோடை வெயில் கொடுமையால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்க என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவனரான சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து விடுவதால் விலங்குகள் – மனித மோதல்கள் ஏற்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து ஜீவராசிகளை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்பதால், வன விலங்குகளுக்காக குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் மையங்களை ஏற்படுத்தவும், தெரு விலங்குகளுக்கு தண்ணீர், உணவு கிடைப்பதை உறுதி செய்யக் கோரியும் அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தனது மனுவை பரிசீலித்து, கோடைகாலத்தில் தெரு விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, தெரு விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வழங்குவதற்காக என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.