
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாடன் லைன் ஹவுசிங் ஃபோர்டு குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும் , 3 வயதில் மகனும் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் கஞ்சா பழக்கம் மட்டுமின்றி போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் அடிக்கடி போதை மாத்திரை பயன்படுத்துவதால் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அதன் காரணமாக சங்கீதா பழைய வண்ணாரப்பேட்டை தந்தான் குளம் தெருவில் வசித்து வருகிறார். ஆகாஷ் அவருடைய தாய் வீட்டில் தனது, மகனுடன் வசித்து வருகிறார். நேற்று திடீரென ஆகாஷ் மயங்கி இருப்பதாக சங்கீதாவிற்க்கு தகவல் கிடைத்தது. அதன் பிறகு சங்கீதா வீட்டிற்கு சென்று, ஆகாஷை ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் இறந்துவிட்டார் என்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆகாஷுக்கு போதை பழக்கம் இருந்ததாகவும், போதை மாத்திரையை தூளாக்கி தண்ணீரில் கலந்து அதை ஊசி மூலம் தனக்குத்தானே செலுத்தி கொண்டு உள்ளதால் அதன் காரணமாக அவர் உயிர் இழந்தார் என கூறியுள்ளார்கள். மேலும் இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் ஆகாஷ் தனியாக ஊசியை செலுத்திக் கொண்டாரா அல்லது நண்பர்களுடன் சேர்ந்து இதுபோல் செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.