சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்துள்ள நிலையில் சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் பிரஜித். இவர் தனது தங்கை முகர்ஷினியுடன் நேற்று இரவு சங்கரன்கோவிலில் இருந்து மோட்டார் சைக்கிளில் குருக்கள்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவர்களது மோட்டார் சைக்கிள் குருக்கள்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, சாலையைக் கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் மீது மோதியது. மேலும், இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற பிரஜித்தும், அவரது தங்கையும் படுகாயமடைந்த நிலையில் இருவரும் உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்து சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


