
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் குட்டையூர், வேலம்பட்டி, மட்டிமரத்தள்ளி மலை கிராமங்கள் உள்ளன.
மூன்று நாட்களுக்கும் மேலாக, பர்கூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதே போன்று பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி, கடம்பூர், மாக்கம்பாளையம் பகுதியிலும் கனமழை பெய்தது. நேற்று இரவு பெய்த கன மழையால் நேற்று மாலை, 4:00 மணிக்கு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து படிப்படியாக காட்டாற்று வெள்ளம் அதிகரித்து, பள்ளத்தை கடக்க முடியாத அளவுக்கு மேட்டூர் அணைக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் குட்டையூர், வேலம்பட்டி, மட்டிமரத்தள்ளி கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற முடியவில்லை. இதனால் மூன்று கிராமங்களிலிருந்து வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் வீட்டுக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.