
பாதாள சாக்கடை பணியால் பொதுமக்கள் அவதி…
தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூடாததால் விபத்து அபாயம் – மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குறிப்பாக, டி.வி.ஏ. நகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாத நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் தெரு முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் மற்றும் குழிகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் நடந்து செல்லும்போது தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் பேசி குழிகளை சரிசெய்ய அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்பகுதிக்கு வந்த பணியாளர்கள் குழிகளில் சில பேவர் பிளாக் கற்களை போட்டு, அதன் மீது மண்ணை பரப்பிவிட்டு சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு தற்காலிகமாக மண்ணை மட்டும் பரப்பினால் மீண்டும் மழை பெய்யும்போது குழிகள் ஏற்பட்டு, பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உருவாகும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மற்ற பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்குப் பிறகு சிமெண்ட் கலவை மூலம் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதைப் போல, இப்பகுதியிலும் முறையாக சாலை சீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், தற்போது உள்ள நிலையிலேயே விட்டுச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல பகுதிகளில் தொடரும் பிரச்சினை
திண்டுக்கல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு வருவதாகவும், ஒரு பகுதியில் குழி தோண்டிவிட்டு பணிகளை முழுமையாக முடித்து சாலையை சீரமைப்பதற்கு முன்பாகவே மற்றொரு பகுதிக்கு சென்று விடுவதால், ஏற்கனவே தொடங்கிய பணிகள் பாதியில் நிற்கும் நிலை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்லும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க கோரிக்கை
ஒரு பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, அப்பகுதி மாமன்ற உறுப்பினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் தங்களது கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை மாற்று இடங்களில் நிறுத்தி வைத்து, பணிகள் நடைபெறும் காலத்தில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பல இடங்களில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென சாலைகளை தோண்டுவதால், அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வாகனங்களை வெளியே எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக செயல்படுவது ஏன்?”
மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களையும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளையும் முறையாக பின்பற்றாமல் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
“பணிகள் தொடங்கும் முன் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினருக்கும் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். தோண்டப்படும் குழிகளை பணிகள் முடிந்தவுடன் முறையாக மூடி, சாலையை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சீரமைக்க வேண்டும். இதனை கண்காணிக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு” என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, டி.வி.ஏ. நகர் 2-வது தெரு உள்ளிட்ட பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூடி, சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பணிகள் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், பணிகள் முழுமையாக முடியும் வரை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை முறையாக கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
