
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜார் பகுதியில் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வரும் சந்தானகிருஷ்ணன் என்னும் முதியவரை மதியம் சுமார் 3 மணியளவில் தனது கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததார். அப்போத மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து தலையணை குறித்து விசாரித்துள்ளார். பின்னர், தனது உறவினர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் இருப்பதாகவும், அவரால் காரில் இருந்து இறங்கி கடைக்கு வர முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் கேட்கும் தலையணையை காரில் சென்று காண்பிக்குமாறு முதியவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய முதியவர் சந்தானகிருஷ்ணன், மர்ம நபருடன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மர்ம நபர் முதியவரை காருக்குள் இழுத்துப் போட்டு, கதவை அடைத்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை சாலையில் சென்றவர்கள் சிலர் பார்த்து காரின் பதிவு எண்ணை உடனடியாக குறித்துக் கொண்டு கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளள்ளனர். பின்னர், கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே வைத்து முதியவர் அணிந்திருந்த 15 கிராம் தங்கச் செயின் மற்றும் 8 கிராம் தங்க மோதிரங்களை பறித்துக் கொண்டு, அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து முதியவர் சந்தானகிருஷ்ணன் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இச்சம்பவம் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.