
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளனூர் கிராமத்தில், பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தற்காலிக கடை அமைத்து பல்வேறு அளவிலான விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.
அப்பொழுது நேற்று இரவு வியாபாரத்தை முடித்த சுப்பிரமணி, கடையின் வாசலிலேயே படுத்து உறங்கியுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அருகிலுள்ள மாந்தோப்பு வழியாக வந்து கடையை கண்காணித்துள்ளனர். பின்னர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 10 அடி உயர விநாயகர் சிலையை தூக்கிச் சென்றுள்ளனர். இதையடுத்து, சிலையை எடுத்துச் செல்வதற்காக கடைக்கு சற்று தொலைவில் டெம்போ வாகனத்தையும் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மாந்தோப்பு வழியாக பிரம்மாண்ட விநாயகர் சிலையை மர்ம நபர்கள் தூக்கிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாமி சிலையே திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிலையை திருடிச் சென்ற நபர்களை போலீசார் அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.