
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அய்யாபுரம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 250 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மிர்த்தா, ராஜா மற்றும் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இதையடுத்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்படி மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
