
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் குறித்து தி.மு.க. எம்.பி. ராஜா பேசிய கருத்துகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தி.மு.க.வினர் நடத்திய ஆபாச நாடகம் பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என விமர்சித்துள்ளார். மேலும், ஊழல், துரோகம், பொய் குறித்து கேள்வி எழுப்பும் போது வன்முறை மற்றும் தரக்குறைவான பேச்சுகளை தி.மு.க.வினர் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய அவர், அரசியலில் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களால் மதிப்பிடப்படுகிறது என்பதை ஸ்டாலின் உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம். தமிழக அரசியல் களத்தில் இருந்து தி.மு.க.வின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது நிச்சயம் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.