
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். மனைவி காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாப்புலர் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு குடியேறியுள்ளனர். இதையடுத்து, நேற்று மாலை காளியம்மாள் வசித்து வந்த வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கவனித்த வீட்டின் உரிமையாளர் சந்தேகமடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, காளியம்மாள் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் இந்த கொலை குறித்து திண்டுக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காளியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காளியம்மாளின் கணவர் ஜெயசீலனின் செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் கொண்ட போலீசார் காளியம்மாளை அவரது கணவர் ஜெயசீலன் கொலை செய்தாரா அல்லது வேறு நபர்கள் இந்த கொலையில் தொடர்புடையவர்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் நடைபெற்ற வீட்டில் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
