
தமிழ்நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் பி.எல்.ஐ. திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளில் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், இன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, வரும் 14-ஆம் தேதி வங்கி விடுமுறை நாட்கள் வருவதால், ஏடிஎம் உள்ளிட்ட வங்கி சேவைகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



