
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவரது நண்பர் ராகுல் ஆகிய இருவரும் சிறந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இரும்புப் பொருட்களை ஏற்றிச் சென்ற கனரக லாரி ஒன்று அவர்களது இருசக்கர வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து பெரிய இரும்பு ராடு ஒன்று சாலையில் விழுந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

