
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ். இவர் ஆர்பரில் வேலை செய்து வருகிறார். இவரது தாயார் ராணி, நவநீதம் என்பவரிடம் ரூ.9 லட்சம் கடன் பெற்றதாகவும், அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாததால் இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், விநாயகர் சிலை வைப்பது தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததால் போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், நவநீதத்தின் உறவினரான சத்யா என்பவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதாக பிரதீப் ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், திருவொற்றியூர் மேற்கு வட வீதியில் பிரதீப் ராஜ் நடந்து சென்றபோது, நவநீதத்தின் மகனுடன் வந்த கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரதீப் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீன் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக பிரதீப் ராஜின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.