
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மதிபால். இவர் காயாமொழி கிராமத்தில் தனக்குச் சொந்தமான 86 சென்ட் விவசாய நிலத்தில் தென்னை மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார். தொடர்ந்து, அரசு மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடிவு செய்த அவர், அதற்காக சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் நில அடங்கல் பெற காயாமொழி கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை அணுகியுள்ளார். அப்போது, அடங்கல் சான்றிதழ் வழங்க ரூ.2,500 லஞ்சமாக தனசேகர் கேட்டுள்ளார். இதையடுத்து மதிபால், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அறிவுறுத்தியபடி, மதிபால் ரசாயனம் தடவிய பணத்தை அலுவலர் தனசேகரிடம் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தனசேகரை பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரிடம் லஞ்சப் பணம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.