
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் நேற்று புதிதாக பிரியாணி உணவகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவையொட்டி, ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்கள் தங்களுக்கும் பிரியாணி வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு பிரியாணி சாப்பிட்ட 10 பள்ளி மாணவர்கள் உட்பட 12 பேருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக 10 பள்ளி மாணவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்தி மற்றும் அதிகாரிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது, பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பிரியாணி மற்றும் அசைவ உணவுகளின் தரம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

