
கிருஷ்ணகிரி மாவட்டம் விஸ்வநாதபுரம் கிராமப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், மாநகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி, அவற்றை தரம் பிரிக்கும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியைச் சுற்றிலும் தற்போது குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இதனிடையே, குடியிருப்புப் பகுதிக்கு அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், கோபமடைந்த மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், அவர்களுடன் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், சார் ஆட்சியர் அக்ரிதி சேத்தியை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தனர். அப்போது, பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகளை ஏன் போராட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என சார் ஆட்சியர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பொதுமக்கள், தங்களது பிரச்சினை குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துரைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, தங்களது கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பொதுமக்கள், பின்னர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்


