
திருப்பூர் மாவட்டம் வெள்ளிமலைபாளையம் பகுதியில் சிஎம்வி குளோபல் கிளாத்திங்ஸ் என்ற தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ் பெண்களுக்கும், வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் வடமாநில பெண்களை தமிழ் பெண்கள் முடியைப் பிடித்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், தாங்கள் இனிமேல் இங்கு பணியாற்ற விரும்பவில்லை எனக் கூறி, தங்களது உடைமைகளுடன் நிறுவனத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். அப்பொழுது, நிறுவன நிர்வாகம் தங்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் கதவுகளை பூட்டி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி, பெண்கள் கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
