
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி ஊராட்சிப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் திறந்து விடப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து குடிநீர் திறந்து விடும் பணியில் உள்ள குமார் என்பவரிடம் பொதுமக்கள் கேட்டபோது, குடிநீர் குழாய் உடைந்துள்ளதாகவும், அதனை சீரமைக்க தேவையான பணத்தை யாரிடம் கேட்பது என கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது பொதுமக்கள் ஊராட்சியில் இதற்காக நிதி ஒதுக்கப்படுவதில்லையா என்றும், தங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதே என்று கேட்டபோது, சம்பளம் வாங்குகிறோம் அதற்காக குழாய் உடையும் போதெல்லாம் வந்து சரி செய்ய முடியுமா என அவர் அலட்சியமாக பதிலளித்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பணம் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து, தண்ணீர் திறந்து விடும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



