
தஞ்சை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கோடியம்மன் கோவில் அருகே இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அப்பொழுது நீண்ட நேரமாக பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், சூடான மசாலா டீ, பிரட், பிஸ்கட் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட சிற்றுண்டிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்குவதால், ஓட்டுநர்கள் சோர்வின்றி கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனின் இந்த செயலுக்கு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
