
சென்னை காசிமேடு பகுதி நேதாஜி நகரை சேர்ந்தவர் யூசுப் . இவர் அதிக அளவில் மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி வந்து, காசிமேடு சிக்னல் அருகே நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதிலேயே தூங்கியது தெரியவந்தது. இதனால் அரசு பேருந்து சிக்னல் அருகே செல்ல முடியாமல் நின்றதுடன், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட நிலையில் , இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ராயபுரம் N1 போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆட்டோவை சாலையோரமாக அப்புறப்படுத்தி, ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவரிடம் மது போதை பரிசோதனை மேற்கொள்ள முயன்றனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனை கருவியில் சரியாக ஊதுமாறு போலீசார் அறிவுறுத்தியும், அவர் முறையாக ஒத்துழைக்காமல் போலீசாரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. பலமுறை முயற்சித்த பின்னர் பரிசோதனையில் 40-க்கும் மேற்பட்ட அளவு பதிவானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், ஆட்டோவை விடுவிக்கக் கோரி யூசுப் ₹20 நோட்டை போலீசாரிடம் கொடுக்க முயன்றதாகவும், ஆனால் போலீசார் பணத்தை வாங்காமல், ஆட்டோவை பறிமுதல் செய்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதை அடுத்து ,போலீசார் அபராதம் செலுத்துமாறும், இனிமேல் குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.



