
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவள்ளான் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 2 ஆண்டுகளாக மோட்டார் பழுதடைந்த நிலையில் இருப்பதால் குடிநீர் முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அசுத்தமான குடிநீர் பாட்டிலுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பழுதடைந்த மோட்டாரை உடனடியாகச் சீரமைத்து தர கோரி 16 கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்ற நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். இதை தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சரவணன் இருமுறை நேரில் ஆய்வு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர்.




