
தமிழக காவலர்களின் சார்பில் 16 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக சட்டசபை கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறை சார்பிலும் மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன. தமிழக காவல்துறையானது முதலமைச்சர் துறையின் கீழ் வருவதால் விரைவில் காவல் துறை சார்பாக மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழக காவலர்களின் சார்பில் அரசுக்கு பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, காவலர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.18,200-ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும் பணியிட மாறுதல் கோரி கொடுக்கப்படும் மனுக்களுக்கு குறைந்தது 6 மாதங்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும் என்றும் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளனர். இதை தொடர்ந்து, கட்டாய வார விடுப்பு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணி நேரத்தை வரையறுக்க வேண்டும், பதவி உயர்வு நடைமுறையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், உணவுப்படி, ETR, எரிபொருள் படி, இடர்ப்படி மற்றும் வீட்டு வாடகைப்படியை உயர்த்த வேண்டும் என்றும், அரசு விடுமுறை நாட்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைத்துள்ளனர். குறிப்பாக, ஒரு மாவட்டத்திற்குள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இலவச பேருந்து பயண அட்டையை விரிவுபடுத்த வேண்டும் என்று காவலர்கள் சார்பில் இந்த 16 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

