
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு,பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து திமுக சார்பில் ஏற்கனவே விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டிருந்ததாகவும், பலமுறை வலியுறுத்தியும் விவாதம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட பின்னர், அந்த அறிவிப்பு குறித்து விவாதம் நடத்தப்படாது என பேரவைத் தலைவர் தெரிவித்ததாகவும், இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் முக்கியமானது என்றும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் புதிய விமான நிலையம் அவசியம் என்றும் தெரிவித்தார்.பரந்தூர் விமான நிலையத்திற்காக சுமார் 90 சதவீத நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதுடன் சில நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.திட்டத்தை கைவிட்டால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை என்னவாகும் என்றும், பரந்தூரை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட மெட்ரோ திட்டத்தின் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படுமா, அப்படியானால் அந்த இடம் எது, அங்கு நிலம் எவ்வாறு கையகப்படுத்தப்படும் என்பது குறித்து தமிழக வெற்றி கழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.அரசியல் காரணங்களுக்காக வளர்ச்சித் திட்டங்களை கைவிடுவது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்றும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் தொழில் வாய்ப்புகள் பிற மாநிலங்களுக்கு செல்லும் சூழல் உருவாகும் என்றும் தங்கம் தென்னரசு எச்சரித்தார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தொடர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும், மாற்று இடம் குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
