
சிவகங்கை மாவட்டம் சின்ன புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன். இவர் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது உறவினரான முருகேசனின் மகளை திருமணம் செய்து தருமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததால், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில், இன்று சிவபாலனுக்கும் முருகேசனின் மகன் அருண்ராஜாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு சிவபாலன் வாளால் தாக்க முயன்றதாக அருண்ராஜா தனது தந்தை முருகேசனிடம் தெரிவித்ததார். இதையடுத்து முருகேசன், சிவபாலனிடம் சென்று விசாரித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் முருகேசன் அரிவாளால் சிவபாலனை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த மோதலில் முருகேசனுக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறி இருவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவபாலனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக முருகேசன் மற்றும் மகன் அருண்ராஜா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவத்திற்கான காரணம் மற்றும் கொலை நடைபெற்ற விதம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
