க்ரைம்
Trending

பேருந்து வராததால் ஆத்திரம் – 4 மணி நேரம் காத்திருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம், கொட்டாம்பட்டி, காரைக்குடி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் நீண்ட நேரமாக வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துகளை மறித்து சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், (ஆக.22 சனிக்கிழமை இரவு 11 மணிக்குப்) பிறகு சுமார் 4 மணி நேரமாக நத்தம் வழித்தடத்துக்கு பேருந்துகள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பேருந்துக்காக காத்திருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆத்திரமடைந்து, பேருந்து நிலையத்துக்கு வந்த பிற வழித்தட பேருந்துகளை மறித்து சிறைபிடித்தனர். இதையடுத்து, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, அங்கு பணியாளர் ஒருவர் கூட இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த மாதத்தில் மட்டும் இதுபோன்ற சம்பவம் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மூன்றாவது முறையாக நடைபெறுவதாகவும் பயணிகள் தெரிவித்தனர். பேருந்துகள் வந்தபோது அவற்றில் ஏற்கெனவே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரமாக காத்திருந்தவர்கள் முண்டியடித்து ஏற முயன்றதில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பயணிகள் கூட்டத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதில் இருவரின் செல்லிடப்பேசிகள் திருடுபோனதாகவும் கூறப்படுகிறது. இதனால், நத்தம் வழித்தட பேருந்துக்காக பொதுமக்கள் விடிய விடிய காத்திருந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button