
தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக 3 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (22), அமுதா நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23), சுடலை காலனியைச் சேர்ந்த குரு (21) ஆகிய மூவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. அலெக்ஸின் பிறந்தநாளையொட்டி மூவரும் இணைந்து நாட்டு வெடிகுண்டை தயாரித்து, திறந்தவெளியில் வெடிக்கச் செய்து வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்ததாக கூறப்படுகின்ற நிலையில், பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக தெரியவந்துள்ளது .இதனை குறித்து, தகவல் அறிந்த வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரகாஷ் உத்தரவின்படி, தென்பாகம் போலீசார் மூவரையும் கைது செய்தனர். இதனையடுத்து, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் யூடியூப் மூலம் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது குறித்தும் , அதனை வெடிக்கச் செய்து பயிற்சி எடுத்ததாகவும், தங்கள் பகுதியில் கெத்து காட்டுவதற்காக இதை செய்ததாகவும் மூவரும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், கோஷ்டி மோதல் அல்லது வேறு ஏதேனும் குற்றச்செயலுக்கு திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்தார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் ஏற்கனவே கடந்த மாதம் 8 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து வீடியோ வெளியிட்டதில் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
