
பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி லட்சுமி தேவி மகள் கிருத்திகா. இவர்கள் இருவரும் உறவினர் திருமண நிகழ்விற்காக பொள்ளாச்சி சென்று விட்டு வீட்டிற்கு கிருத்திகா தனது இருசக்கர வாகனத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டு தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். பெரியாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், லட்சுமி தேவியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். நகையை தாங்களே கழற்றி தருவதாக இருவரும் கூறியபோதும், அதனை பொருட்படுத்தாத மர்ம நபர்கள் நகையை பறித்ததுடன், தாய்–மகள் இருவரையும் கீழே தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதில் லட்சுமிதேவிக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப் பகலில் தனியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் லட்சுமி தேவி அணிந்திருந்தது கவரிங் நகையென தெரிய வந்தது.