திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வரலட்சுமி விரத நன்னாளான இன்று காலை முதலே அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
வரலட்சுமி விரத விழாவினை முன்னிட்டு, முத்துமாரியம்மனுக்குப் புதிய ₹500, ₹200, ₹100, ₹50, ₹20 மற்றும் ₹10 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட ரூபாய் நோட்டு மாலைகள் மற்றும் தோரண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அம்மன் சன்னதி மற்றும் கருவறை முழுவதும் வண்ணமயமான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
தொடர்ந்து அம்மனுக்குப் பலவகை நைவேத்தியங்கள் படைக்கப்பட்டுச் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்தத் தனித்துவமான ரூபாய் நோட்டு அலங்காரத்தைக் காணவும், வரலட்சுமி விரத நாளில் அம்மனின் அருள் பெறவும் பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

