
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஈஷா சார்பில் 18-வது ஆண்டு கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தொடங்கி வைத்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ந்து வரும் நிலையில், உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுவதாகவும், குழந்தைகள் காலை முதல் இரவு வரை மொபைல் போன்களில் நேரத்தை செலவிடுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, ஆல்கஹால், புகையிலையை விட மொபைல் போன்கள்தான் மிகவும் ஆபத்தானது என அவர் குறிப்பிட்ட அவர், குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிகவும் முக்கியம் என்றும், குழந்தைகளின் எதிர்கால இலக்குகளை அடைய விளையாட்டு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், கிராமப்புறங்களில் உள்ளவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கூறிய அவர், ஈஷா போன்ற அமைப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதையும் கனிமொழி சந்தோஷ் சுட்டிக்காட்டினார்.


