க்ரைம்

கல்லூரியில் உற்சாகமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – மாவேலி வேடத்தில் மாணவர் ஊர்வலம்

பழனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய முறையில் ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இதையொட்டி கல்லூரி வளாகத்தில் வண்ண மலர்களைக் கொண்டு அழகிய அத்தப்பூ கோலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாவேலி மன்னர் வேடம் அணிந்து, கையில் குடையுடன் வந்த மாணவரை கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்று வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கேரள பாரம்பரிய உடை அணிந்த மாணவிகள் திருவாதிரை நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். மாணவ, மாணவியர் ஒன்றிணைந்து பாரம்பரிய பாடல்கள் மற்றும் நடனங்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியதால் கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டது.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து கல்லூரியில் படித்து வரும் மாணவர்களும் தங்களது நண்பர்களுடன் இணைந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். வழக்கமாக தங்களது குடும்பத்தினருடன் கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி வந்த நிலையில், இந்த ஆண்டு கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியது தங்களுக்கு புதிய மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாக கேரள மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களிடையே கேரள பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நட்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த ஓணம் கொண்டாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button