
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக பராமரிக்கப்பட்ட அம்மா உணவகம் குறித்து தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 8 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவை அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அம்மா உணவகங்களை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக தெரிவித்த அவர், தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி ,அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து, த.வெ.க அமைச்சர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விக்கு, அவர்கள் ரீல்ஸ் போடுவதற்காக பேசுகின்றனர் என தெரிவித்த அவர், இதை வன்மையாக கண்டிப்பதாகவும், அவர்களால் முடிந்ததை செய்யட்டும், அதற்கு நாங்கள் கவுண்டர் வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
