
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புற்றுநோய் கருத்தரங்கில் தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவது என சட்டப்பேரவைத் தலைவராக தான் எடுத்த முடிவு சரியானதுதான் என உயர் நீதிமன்றம் தெரிவித்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்தார். தொடர்ந்து, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குவதாக தெரிவித்த அவர், சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தகவல்களை எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்துவது பேரவையின் மாண்புக்கு எதிரானது என்றும் கூறினார். மேலும், த.வெ.க அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது மக்கள் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள உதவும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக அரசின் நிதிநிலையை ஆராய்ந்து முதலமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், பள்ளிக்கல்வித்துறையில் மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும் என்றும், சிறிது கால அவகாசம் வழங்கினால் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

