
காவிரி நதிநீர் விவகாரம் குறித்து அலோசிக்க முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது தொடர்பான எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மின்கட்டணத்தில் மாறுபாடுகள் உள்ள 3 லட்சத்து 50 மின் இணைப்புகளில் மறுமதிப்பீடு நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், ஒரு வார காலத்திற்குள் மறு மதிப்பீட்டு பணிகள் நிறைவடையும் என்றும் உறுதி அளித்தார். தொடர்ந்து, மேகதாது விவகாரத்தில் மக்களை குழப்பும் விதமாக அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது என குற்றம் சாட்டிய அவர், மேகதாது விவகாரம் இரண்டு மாநில சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றும், இதில் சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்து வருகிறார் என்றும் தெரிவித்தார். மேலும், காவிரி நீரை பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுவது, காவிரி நடுவர் மன்றம் அமைப்பது, மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையின் மூலம் காவிரி நதிநீரை பெறுவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற வழிகளை பயன்படுத்தி காவிரி நீரை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முதலமைச்சர் செய்வார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

