நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள் மீதான தடியடிக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனிடையே, திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வாயிலில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.