
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது தந்தை பிரித்துக் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வரி செலுத்தி வந்துள்ளார். அந்த இடத்திற்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பித்த நிலையில், சர்வேயர் மாரிராஜை சந்தித்துள்ளார். அப்போது ஜெகதீஷ் என்பவர் சர்வேயர் அனுப்பியதாகக் கூறி இடத்தை பார்வையிட்டுள்ளார். அதன் பின்னர், விண்ணப்பத்தில் சர்வே எண் தவறாக இருப்பதால், கருப்பசாமி கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மீண்டும் தனிப்பட்டா கோரி விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, செப்டம்பர் 8-ம் தேதி சர்வேயர் மாரிராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் நிலத்தை அளந்ததாகவும், வரைபடம் தயாரித்து தாசில்தாரிடம் அறிக்கை அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் கருப்பசாமி தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரசாயனப் பவுடர் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தை கருப்பசாமியிடம் கொடுத்து அனுப்பினர். இன்று கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஜெகதீஷிடம் பணம் வழங்கப்பட்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, லஞ்சப் பணப் பரிவர்த்தனையில் தொடர்புடையதாகக் கூறப்படும் சர்வேயர் மாரிராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.