
தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழை பொதுமக்களே டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
சட்டசபையில் கடந்த செப்.2-ம் தேதி விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பொதுமக்கள் தாங்களே டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து, புதிய வாகனம் வாங்கி அதன் பதிவு பணிகள் நிறைவடைந்ததும், டிஜிட்டல் ஆர்சி சான்றிதழை இணையதளம் மூலம் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு முடிந்த அன்றே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும். இந்த டிஜிட்டல் ஆவணங்களில் க்யூஆர் குறியீடு இடம் பெற்றிருக்கும். அதனை ஸ்கேன் செய்வதன் மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் ஆவணங்களின் நம்பகத்தன்மையை மின்னணு முறையில் எளிதாக சரிபார்க்க முடியும். மேலும், டிஜிட்டல் சான்றிதழ்களை ஒரு ஆண்டுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆவணங்களைப் பெறுவதற்காக அலுவலகங்களுக்கு நேரில் செல்வது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


